Monday, December 12, 2011

பாலியல் கல்வி என்பது புணர்ச்சி சார்ந்தது அல்ல; அந்த எண்ணம் தவறானது

essay
                                                                                               PATHWAY COUNSELORS இன் இயக்குநரும் நிறுவுநரும் பாலியல் எச்.ஐ.வி./எயிட்ஸ் சார்ந்த உளவளத் துணையாளரும் நோயாளர் உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் உப தலைவருமான கந்தர் விசுவலிங்கம் கந்தவேளுடனான உதயனின் நேர்காணல்


யாழ். மாவட்டத்தில் தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கை முன்னர் என்றும் இல்லாதவாறு விடம்போல் வீறு கொண்டுள்ள இவ் வேளையில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் எவ்வாறானவையாக அமைய வேண்டும் என எண்ணுகிறீர்கள்?
அதிக ஆபத்தை விளைவிக்கக் கூடிய நபர்களை மையப்படுத்தியவைகளாகவே அமைதல் சாலச் சிறந்தது. ஆனால் இவர்களை இலகுவில் இனங்காண வல்ல எத்தகைய முயற்சியிலும் இன்றுவரை இங்குள்ள அரச அலகினர் முயலாமை வேதனையைத் தருகிறது. குறிப்பாகத் தொற்றுக்குள்ளான பெண்களில் 60 வீதத்தினர் தமது கணவன்மார்களாலேயே தொற்றுக்குள்ளானவர்கள் என்பதை எமது மாவட்டத்தின் மருத்துவத்துறையினர் மறந்தும் மறந்துவிடக்கூடாது.

நீங்களாவது பாலியல் தொழிலாளிகளை, ஓரினச்சேர்க்கையாளர்களை மையப்படுத்திய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்தானே ?
 
பயன்தரவல்ல தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எக் குழுவினரையும் ஆபத்தானவர்கள் என முத்திரை குத்தக்கூடாது. ஒவ்வொரு தனி மனிதனது நடத்தைக் கோலங்களே தொற்றுக்குக் காரணங்களாக அமைகின்றன என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். மேற்குறிப்பிட்ட குழுவினரில் பலர் தொற்று அற்றவர்களாக வாழ்வதையும் பாலியல் தொற்று மற்றும் எச்.ஐ.வி./எயிட்ஸ் சார்ந்தவற்றில் ஆழ்ந்த அறிவுடையவர்களாகவும் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு அலகினரைவிட அதிக அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் ஈடுபடுவதை நான் அவ்வாறான அமைப்புகளில் அவர்களுடன் ஒன்றிணைந்து பல ஆண்டுகள் தொண்டாற்றியமையால் நன்கு அறிவேன். 
 
பலர் தாம் தொற்றுக்குள்ளாகுவதைத் தடுப்பதில் மட்டுமல்ல ஏனையோரையும் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் மிக அக்கறையாக உள்ளனர். சந்தர்ப்ப வசத்தினாலோ அல்லது சபலத்தினாலோ ஆபத்து விளைவிக்கவல்ல நடவடிக்கைகளில் ஈடுபட்டு தொற்றுக்குள்ளான ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த பலர் தமது தொற்று நிலையைப் பகிரங்கமாக எடுத்துரைத்து தடுப்பு மற்றும் பேணிப் பாதுகாத்தல் என் பனவற்றில் பயன்தரவல்ல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எம்மவரோ தமது தொற்று நிலைபற்றிப் பகிரங்கப்படுத்த அஞ்கின்றனர். 
 
இதற்கான முழுமுதற் காரணகர்த்தாக்களில் ஒருவர் யாழ்.போதனா மருத்துவமனை 33ஆவது அறையின் மருத்துவ அதிகாரியே. மருத்துவர்களுக்கான நன் நெறிக்கோவையில் குறிப்பிடப்பட்ட பலவற்றுக்கு முரணாகவே இவ்வறையில் நோயாளர்கள் நடத்தப்படுகிறார்கள் என்பது குடாநாடு அறிந்த உண்மை.
 
பெண்கள் தொற்று நிலை பற்றி? 
 
பெண்கள் தொற்றுக்குள்ளாகுவதற்கு முழு முதற்காரணமாக அமைவது அவர்களின் அறியாமையுடனான பேரம் பேச இயலாமையே. 
 
ஆண்களின் மேலாதிக்க நிலையில் கணவன்மார்கள் பல்வேறு பாலியல் தொற்றுக்கு உள்ளாகியமையை நன்கு அறிந்தும் பேரம் பேச இயலாமையால் தொற்றுக்குள்ளாகிய பெண்களில் பலருக்கு எமது அமைப்பினர் உளவளத்துணை வழங்கியுள்ளனர்.
 
இவ்வாறான நிலையிலிருந்து பெண்கள் மீண்டு எழ ?
 
பாலியல் சார்ந்த கல்வியை அவரவர் வயதுக்கும் தேவைக்கும் ஏற்ப நன்கு பயிற்றப்பட்ட தன்னலமற்ற மனித நேயமிக்கவர்களால் இவர்களுக்கு வழங்க வேண் டும். திருமணத்துக்கு முன் உளவளத்துணை வழங்க வேண்டும். இளவயதினருடன் இச்சையைத் தூண்டக் கூடிய நாடகங்களையும் சினிமாக்களையும் மணிக் கணக்காக ஒன்றாகப் பார்க்கும் பல பெற்றோர்களும் பொதுமக்களும் பாலியல் கல்வி என்பது புணர்ச்சி சார்ந்தது என்ற ஏற்கனவே பற்றிக்கொண்ட சில தவறான எண்ணங்களின் அடிப்படையில் ஏற்க மறுக்கின்றனர். அவ் எண்ணத்தை நீக்கிட வேண்டும். 
 
நீங்கள் ஏன் தன்னினச் சேர்க்கையாளர்கள் பாலியல் தொழிலாளிகளை மையப்படுத்தி உங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடாது?
 
உன்னிப்பாகக் கவனியுங்கள் 
 
(அ).   குழுவினர் அனைவருமே எயிட்ஸ் தொற்றுக்கு இலக்கானவர்களா?
 
(ஆ). இவர்கள் அனைவர்களைப் பற்றிய தகவல்களோ தரவுகளோ உள்ளனவா ?
 
அத்துடன் சரியாகக் கணக்கிட முடியுமா ? முடியாது எனின் அதற்கான காரணங்கள் எவை ?
 
காரணங்கள் என நான் கொள்பவை எச்.ஐ.வி.யைச் சுற்றிச் சுழல்கின்ற பயம் உண்மையை மறுதலித்தல், முத்திரை குத்தல், ஓரங்கட்டி ஒதுக்கித்தள்ளல் என் பவற்றுடன் தேசத்தின் நீதிநெறிக் கொள்கை, அரச அலகினரின் அர்ப்பணிப்பு இன்மையுமே. இவைகளாலேயே இவ்வாறானவர்கள் மறைந்தே வாழ்கின்றனர். இவர்கள் எண்ணிக்கையை இலகுவில் கணக்கிட இயலாதுள்ளது. இவர்களின் உள்ளத்தை முதலிலே வென்றெடுக்க வேண்டும். 
 
சமுகமான நிலையை உருவாக்க ?
 
பாலியல் தொற்று சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடும் எம்மவர்கள், ஏனைய மாவட்டத்தில், ஈடுபடும் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் அரச அலகினர் போன்று தீர்ப்பிடாதும் அர்ப்பணிப்புடனும் மருத்துவ சபையினர் சுட்டிக்காட்டுகின்ற நெறி முறைகளுக்கு ஒப்ப நடந்திடவேண்டும். 
 
யாழ். போதனா மருத்துவமனை யாழ்.மாவட்ட மக்களுக்கு மட்டுமல்ல வட புலத்தவர்களின் மருத்தவ தேவையையும் நிறைவு செய்திடும் ஒன்றாக உள்ளது.
 
எனவே யாழ். போதனா மருத்துவமனையின் 33 ஆவது அலகின் மருத்துவ பரிசோதனை அறை மருத்துவத்துறையினருக்கான நன்நெறிக் கோவையில் சுட் டிக்காட்டிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
 
மேலும் இத்துடன் இங்கு இரகசியம் பேணத்தக்க சூழ்நிலையும் உருவாக்கப்பட வேண்டும். பேணத்தகாத இக் கொடூர நிலை பற்றி நேரிலும் ஊடகங்கள் மூலமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மருத்துவ அதிகாரிக்குச் சுட்டிக்காட்டியும் இன்றுவரை அந்த நிலை நீங்க எவ்வித நடவடிக்கையும் அவரால் முன்னெடுக்கப்படவில்லை. 
 
இதனால் ஆபத்துக்குள்ளாகி விட்டோம் என அஞ்சுகின்றவர்களில் பலரும் தொற்றுக்கு உள்ளான பலரும் அங்கு செல்லாது அதிக பணத்தைச் செலவு செய்து கொழும்பு சென்று சிகிச்சை பெறும் சிலரை அவரது உயர்அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளும் வேளை முன் நிறுத்த எம்மால் இயலும்.
 
அரசு தேவையானவற்றை வழங்காமை காரணமாக இந்தநிலை உருவாகி இருக்கலாம்தானே ?
 
 அரசு வழங்கிய வளங்களையே இந்தவறையினர் முறைப்படி பயன்படுத்துவது இல்லை. இங்கு சிகிச்சை வழங்கக்கூடிய சாதாரண பாலியல் தொற்றுகளுக்குமே இங்கு பணியாற்றும் மருத்துவர் சிகிச்சை வழங்காது இடநெருக்கடியும் வேலைப்பளுவும் மிக்க Wards மருத்துவ நிபுணரிடம் அனுப்பி விடுவதை வழக்கமாகிக் கொண்டுள்ளமை பரம இரகசியம்.
 
இதனால் பல வேளைகளில் இரகிசியமாகப் பேணப் பட வேண்டியவை இலகுவில் கசிந்து விடுவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளன. என மருத்துவ அதிகாரி மனித உரிமைக் குழுவினரது விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசு வடிவமைத்த ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நோயாளர்கள் பரிசோதிக்கப்படுவதே இல்லை. 
 
இவை பற்றி தாங்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் பற்றி ?
 
மனித உரிமை ஆணைக்குழுவில் இரகசியம் பேணாமை சார்ந்த முறைப்பாட்டை முன்வைத்த வேளை இரகசியம் பேணத்தக்க சூழ்நிலை மிக விரைவில் உருவாக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது. ஆண்டுகளாகியும் எதுவுமே ஆகவில்லை. எதுவுமே ஆகாத நிலையில் அடுத்து நீதி தேவதையிடம் முறையிடுவது பற்றிச் சிந்திக்கிறோம்.
 
எச்.ஐ.வி. தொற்றும் முறை பற்றி விளக்குவது மிகவும் சிரமமான பணிதானே ?
 
ஆம் எயிட்ஸ் தினத்தில் மட்டும் விளம்பரத்துக்காக எதோ ஒன்றை முன்னெடுத்துவிட்டு செய்ய வேண்டியவற்றில் எதனையுமே செய்யாது விட்ட அதிகாரிகள் அரசைக் குறைகூறாது இனிவரும் ஆண்டுகளிலாவது அரசு வழங்கிய வளங்களை உரிய வகையில் பயன்படுத்துவதுடன் மருத்துவ நன்நெறிக் கோவைக்கு உட்படச் செயலாற்றுவார்களாகில் எவை, எவர்களைச் சென்றடைய வேண்டுமோ அவை அவர்களைச் சென்றடையும்.
 
ஏனைய மாவட்டங்களைப் போல் இங்கு இனங்காணுவதற்கான நடவடிக்கைகள் ஏன் முன்னெடுக் கப்படவில்லை என எண்ணுகிறீர்கள் ?
 
தமது வரையறுக்கப்பட்ட கடமைகளையே நிறை வேற்றாதவர்கள் இவ்வாறான அர்ப்பணிப்புடனான பணிதனை மேற்கொள்வார்களா?
 
மாற்று வழிகள் ?
 
இன்று எச்.ஐ.வி. சார்ந்த விடயங்களில் ஈடுபடும் தொண்டர் நிறுவனங்கள் ஒன்றுகூடி
 
அ. தாம் சக்தியுடனும் வல்லமையுடனும் பணியாற்றக் கூடிய பகுதிகளை இனங் கண்டபின் தம்மிடையேயுள்ள அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் ஈடுபடுவர்களின் துணையுடன் ஆபத்து விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர் களையும் ஈடுபட்டவர்களையும் இயன்றளவு இனங்காண வேண்டும்.
 
ஆ. அதன் பின் இனங்காணப்பட்டவர்கள் இலகுவாகவும் இரகசியமாகவும் பொலிஸாரையும் சுகாதாரத் துறையினரையும் அச்சமின்றி சந்தித்துக் கலந்துரை யாடுவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
 
பொலிஸாரும் பொதுமக்களும் எம் தேசத்தின் நீதி நெறிக்கு முரணான நடத்தைக் கோலங்களில் ஈடுபடுபவர்களை ஓரக்கண்ணால் பார்க்கின்றமையைத் தவிர்த்து அவர்களும் தொற் றுக்குள்ளாகாது வாழ தம்மாலானவற்றை வழங்க ஆவனபுரிய வேண்டும்.
 
தண்டனை வழங்குவதையே முழுமுதல் நோக்கமாகக் கொள்ளாது அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடக் காரணமாக அமைந்தவற்றை இயலுமானாவரை கண்டறிந்து அவ்வாறானவற்றைத் தாமாகவே களைய முன்வர வேண்டும். இயலாதவிடத்து அப்பணியில் ஈடுபடும் தகுதியானவர்களிடம் அவ் விடயத்தை ஒப்படைக்க வேண்டும்.
 
இ. சட்ட விதிகளுக்கு முரணான நடத்தைக் கோலங்களில் ஈடுபட்டவர்களையும் ஈடுபடுபவர்களையும் சீர்படுத்தி செம்மைப்படுத்த சுகாதாரத் துறையினர் தமது மேலாதிக்க செயற்பாட்டைத் தவிர்த்து தரமிக்க தொண்டர் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து சமூக உறுப்பினர்களைக் களத்தில் இறக்கித் தகவல்களையும் தரவுகளையும் உரிய முறையில் திரட்டல் வேண்டும்.
 
இவை எம் மண்ணில் சாத்தியமா?
 
இன்று அதிக அளவில் தெரியவந்துள்ள போதைப் பொருள் பாவனையிலும் அக்கறை காட்டியே ஆக வேண்டும். இவ்வாறான முயற்சி ஏனைய மாவட்டங்களில் வெற்றியளித்துள்ளது. எமது கலாசார பண்பாட்டுப் பின்னணியை ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அதிகளவான வேறு பாட்டைக்காண இயலாது. எனவே மிகமிகச் சாத்தியமானது.
 
புறக்காரணிகளை முதன்மைப்படுத்தித் தமது நடத்தைக் கோலங்களுக்குத் தாமே பொறுப்பு என்பதை உணராது அடுத்தவர்களையே குறை கூறுபவர்கள் ஏனையவர்களைக் குற்றவாளிக் கூண்டிலும் நிறுத்துகின்றனர்.
இந்நிலை மாறவேண்டும்.
 
தவிர்த்து எமது நடத்தைக் கோலங்களுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். நீங்கள் புறக்காரணிகள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள் ?
 
கூட்டுக் குடும்பக் குலைவு, இடப்பெயர்வு, நகரம் நோக்கிய நகர்வு, காலந்தாழ்த்திய திருமணங்கள் இவை அனைத்தையுமே தவிர்க்க முயலுவது நடமுறைச் சாத்தியமற்ற ஒன்று. ஆகவே இவற்றின் தீய மற்றும் பக்க விளைவுகளைத் தவிர்க்க இதய சுத்தியுடன் முயலவேண்டும்.
 
பாலியல் சார்ந்த கல்வியை எமது இளவயதினருக்கு உரியவேளை புகட்டுவதிலும் நடத்தைக் கோலங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் பெற்றோர், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள், உளவளத்துணையாளர்கள் பங்களிப்பை வழங்கக் கூடியவர்கள் எனக் குறிப்பிடலாம்.
 
இப் பணி பற்றி ?
 
மிகமிகக் கடினமானது. இன்றும் நாம் முன்னெடுக்கும் ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளுக்குமே. தன்னலமிக்க அரச அலகினால் சிலர் பல்வேறு தடை களைத் திட்டமிட்டே மேற்கொண்டு வருகின்றனர்.  

No comments:

Post a Comment