Friday, December 23, 2011

கொழும்பு மெனிங் சந்தையும் பேலியகொடைக்கு இடமாற்றம்!- அரசாங்கம்


கொழும்பு மெனிங் சந்தை மற்றும் மொத்த விற்பனை நிலையம் ஆகியவற்றை பேலியகொடை பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. என அமைச்ரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக தொடர்ந்து தெரிவித்தாவது:
தற்போதைய நிலைமையில் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் கொழும்பு மெனிங் சந்தை மற்றும் மொத்த விற்பனை நிலையம் ஆகியவை பேலியகொடை பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளன.
தற்போது மெனிங் சந்தை அமைந்துள்ள இடம் உள்ளடக்கப்படும் வகையில் புறக்கோட்டை பஸ் நிலையத்தை விஸ்தரிப்பதற்கும் நடை பாதை வியாபாரிகளுக்கு விசேட வர்த்தக கட்டடம் ஒன்றை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புறக்கோட்டையில் உள்ள பழைய மீன் சந்தை காணப்பட்ட மத்திய சந்தை கட்டடம் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.
அத்துடன் புளும்பீல்ட் மைதானம் மற்றும் விற்பனைத் திணைக்களம் ஆகியவற்றை நவீனமயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கொழும்பு கோட்டை பேர வாவியை பாதுகாத்தல் புறக்கோட்டை மத்திய பஸ் தரிப்பிடத்தின் அருகில் உள்ள வளாகத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கு வர்த்தக பிரதேசம் ஒன்றை அமைத்தல், சுதந்திர சதுக்க வளாகத்தை மறுசீரமைத்தல் ஆகியன முன்னெடுக்கப்படவுள்ளன.
முன்னுரிமை வேலைத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை இலங்கை இராணுவ பொறியியல் சேவை ரெஜிமன்ட் மற்றும் இலங்கை கடற்படை விமானப்படை ஆகியவற்றிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

No comments:

Post a Comment