Monday, December 19, 2011

காலநிலை மாற்றத்தால் வடக்கு கிழக்கு அதிகம் பாதிப்புக்குள்ளாகும்: வானிலை அவதான நிலையம்


காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் வடக்கு, கிழக்கு பகுதிகள் அதிக பாதிப்புக்கு உள்ளாகக் கூடும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
தற்போது பொலன்னறுவை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அங்குள்ள நீர்த்தேக்கங்கள் கலிங்கு மட்டம்வரை நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 மழை காரணமாக நீர்த்தேக்கங்கள் கலிங்கு மட்டம்வரை நிரம்பியுள்ளதால் பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன் அநுராதபுரத்திலுள்ள ராஜாங்கனை நீர்த்தேக்கம் மற்றும் மனக்கட்டிய நீர்த்தேக்கம் ஆகியவற்றின் வான்கதவுகளும் மட்டக்களப்பிலுள்ள உன்னிச்சை நீர்த்தேக்கம், பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் காலநிலை சீரின்மையால் மீனவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அசாதாரண காலநிலை காரணமாக கடலுக்குச் சென்ற முல்லைத்தீவு மீனவர்கள் 6 பேரைக் காணோம்
முல்லைத்தீவு பகுதியில் கடற்றொழிலுக்கு நேற்றுக் காலை சென்ற மீனவர்கள் ஆறு பேர் இரவு வரை கரை சேரவில்லை. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
முல்லைத்தீவு பகுதியில் நேற்று வானிலை அசாதாரணமாக காணப்பட்டது. கடும்காற்று, மழை என்பன காரணமாக வழக்கத்துக்கு மாறாக கடல் அதிக கொந்தளிப்புடன் இருந்தது.
இந்த நிலையில் நேற்றுக் காலை தொழிலுக்குப் புறப்பட்டுச் சென்ற மீனவர்கள் திரும்பி வரவில்லை.
அசாதாரண வானிலை காரணமாக மீனவர் களை தேடிக் கண்டறியும் முயற்சியும் கைகூடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பிந்திக் கிடைத்த தகவலின்படி நள்ளிரவு மீனவர்கள் சென்ற படகு மட்டும் கரை ஒதுங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment