Friday, December 16, 2011

கொழும்பு மெனிங் சந்தை வழமைக்கு! மரக்கறி விலைகள் குறைவடைந்துள்ளன!


கொழும்பு மெனிங் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பியதையடுத்து மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன. இன்றைய தினம் அதிகமான மரக்கறி வகைகள் கிடைத்தமையே இதற்குக் காரணம் என மெனிங் சந்தையின் ஒருங்கிணைப்பாளர் எச்.எல்.சந்தனரத்ன தெரிவித்துள்ளார். 
மெனிங் சந்தைக்கு வழமைக்கு மாறாக இன்று அதிகளவான மரக்கறி லொறிகள் வந்திருந்தன. வழமையாக 150 - 200 ற்கும் இடைப்பட்ட மரக்கறி லொறிகள் சந்தைக்கு வருகின்ற போதிலும் இன்றைய தினம் 250 லொறிகள் வந்ததாக அவர் தெரிவித்தார்.
மரக்கறி கொள்வனவுக்காக மெனிங் சந்தைக்கு செல்லும் நுகர்வோரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும். அனைத்து பகுதிகளிலும் இருந்து மரக்கறி வகைகள் கிடைத்துள்ளதாகவும் அதிகளவான மரக்கறி வகைகள் உர மூடைகளில் பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் மெனிங் சந்தையின் ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டார்.
அதிக லொறிகள் சந்தைக்கு வருகை தந்ததால் இன்று அதிகாலை இடப்பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மரக்கறி மற்றும் பழவகைகளை கொண்டுசெல்லும்போது பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வந்ததால் கடந்த சில தினங்களாக மெனிங் சந்தையின் வர்த்தக நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment