Wednesday, December 14, 2011

முள்ளிவாய்க்கால் போர் நடவடிக்கை குறித்த விபரங்களை கேட்டறிந்த சீன உயர்மட்ட படைத்தரப்பு


        போரின் இறுதிக்கட்டத்தில் நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த தரை நடவடிக்கைகள் பற்றிய குறிப்பிடத்தக்க சில விபரங்களை சீனாவின் உயர்மட்ட படைஅதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தரப்பை மேற்கொள்காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள சீன இராணுவத்தின் அதிகாரிகளுக்கான பிரதி தலைலர் ஜெனரல் மா சியாவோரியன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவைச் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின் போதே, போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க சிறிலங்கா இராணுவத்தினால் தரை நடவடிக்கையின் போது கையாளப்பட்ட வழிமுறைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பாக சீனப் படை அதிகாரிகள் குழு விசாரித்து அறிந்து கொண்டுள்ளது.
சிறிலங்கா இராணுவம் போர் வெற்றி கொள்ளப்பட்ட முறைமை தொடர்பாக பலமுறை விளக்கமளித்திருந்த போதும், சில குறிப்பிட்ட விடயங்கள் குறித்து சீன அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் விசாரித்துள்ளதில் இருந்து, அவை வெளிவராத இரகசியத் தகவல்களாகவே இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதேவேளை சிறிலங்கா இராணுவத்துக்கான பயிற்சிகள் மற்றும் உதவிகளை அதிகரிப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே சீன ஜெனரல் மா சியாவோரியன் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவையும் சீனப் படையதிகாரிகள் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
இவர்கள் கூட்டுப்படைகளின் தளபதி எயர் மார்சல் றொசான் குணதிலக உள்ளிட்ட பாதுகாப்புத் துறைசார்ந்த பலரையும் சந்திக்கவுள்ளனர்.
அத்துடன் சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு நிலைகளுக்கும் இவர்கள் பயணம் செய்யவுள்ளனர்.
இந்தக் குழுவில் சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிவிவகாரப் பணியகத்தின் பிரதித் தலைவர் றியர் அட்மிரல் குவான் யூபி, ஜெனரல் மா சியாவோ ரியனின் செயலர் மூத்த கேணல் குவோ ஹொங்வெய், பாதுகாப்பு அமைச்சின் ஆசிய விவகாரப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் மூத்த கேணல் சொங் யன்சாவோ, கேணல் சா ஓ மெங், கேணல் லியூ பின், கப்டன் ஜியாங் பின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment