Monday, December 26, 2011

சுனாமியால் உயிர் இழந்தவர்களை நினைத்து துன்புறுவதில் இருந்து மீட்சி பெறுதல் அவசியம்: சீ.யோகேஸ்வரன்


2004ம் ஆண்டு நடைபெற்ற சுனாமி அனர்த்தத்தால் உறவுகளை இழந்து தவிக்கும் எம்மக்கள் அதிலிருந்து மீட்சி பெற முனைய வேண்டும். மிகவும் பாரிய இழப்பை சந்தித்த நாவலடி மக்கள் இழப்புகளை தொடர்ந்து சிந்தித்து உங்களது எதிர்காலத்தை பாதிக்க செய்ய கூடாது என மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில், சுனாமி ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களுக்கு இந்து குருமார் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரியை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சீ.யோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தினால் உயிரிழந்த உறவுகள் அனைத்தும் இறைபதம் அடைந்துள்ளன என்ற எண்ணங்களை மனதில் கொண்டு செயற்பட முன்வரவேண்டும். இவ் இயற்கை அனர்த்த அழிவின் நிலையை நினைவில் இருந்து ஓரளவு நீக்கிச் செல்லல் சாலச் சிறந்ததாகும்.
தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பிதிர் கிரியைகள் நடாத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இவ்வுயிர்கள் சிலவேளை வேறு இடங்களில் புதிய ஒரு பிறப்புக்கு நுழைந்திருக்கலாம் அல்லது இறைவன் திருப்பதத்தை அடைந்திருக்கலாம். என அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களால் எதிர்காலத்தில் இவ்வாறான துன்ப சூழல் உருவாகாமல் இருக்க நாம் இறைவனை பிராத்திப்போம் என்று கூறினார்.

No comments:

Post a Comment