Saturday, December 24, 2011

சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டு 7 வருடங்களின் பின் பெற்றோருடன் இணைந்த சிறுமி!


கடந்த 2004ம் ஆண்டு ஆசிய பிராந்தியத்தை தாக்கிய சுனாமியின் போது உயிரிழந்ததாக நம்பப்பட்ட சிறுமியொருவர் 7 வருடங்களின் பின்னர் தனது பெற்றோருடன் மீள இணைந்து கொண்ட சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசிய சுமாத்ரா தீவினுள் உஜொங் பரோக் பிராந்தியத்திலுள்ள கிராமமொன்றைச் சேர்ந்த வதி என்ற 8 வயது சிறுமியே 7 வருடங்கள் கழித்து தனது பெற்றோருடன் மீள இணைந்துள்ளார். தற்போது வதியின் வயது 15 ஆகும்.
தமது கிராமத்தை சுனாமிப் பேரலை தாக்கியபோது வதியின் தாயாரான யஸ்னியா வதியுடனும் ஏனைய இரு பிள்ளைகளுடன் தப்பித்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால் யஸ்னியின் பிடியிலிருந்து விடுபட்ட வதி சுனாமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவரைத் தேடிக் கண்டுபிடிக்க அவரது பெற்றோர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து வதி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை வதியின் தாத்தாவான இப்ராஹிம், முயலாபோர் நகரிலுள்ள தனது வீட்டில் நபரொருவரை சந்தித்தார்.
அவருடன் 15 வயது சிறுமியான வதியும் வந்திருந்தார். வதிக்கு தனது பாட்டனாரான இப்ராஹிமை தவிர தனது குடும்பத்தினர் எவரது ஞாபகமும் இல்லாதிருந்தது.
தனது வீட்டிற்கு செல்லவழி தெரியாது தேனீர்சாலையொன்றில் வதி தனிமையில் அமர்ந்திருந்த போதே அவரைக் கண்டு அழைத்து வந்ததாக இப்ராஹிமின் நண்பர் தெரிவித்தார்.
இதனையடுத்து வதியின் தாயாரான யுஸினாருக்கும் தந்தைக்கும் தகவல் பறந்தது.
சிறுமியின் முழங்கையில் காணப்பட்ட தழும்பொன்றை அவதானித்து அவரே தமது மகள் என அவரது பெற்றோர் அடையாளங்கண்டு கொண்டனர்.
இவர் தன்னை தத்தெடுத்த பெண்ணொருவரால் பிச்சையெடுக்க வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment