Saturday, December 31, 2011

யாழ். குடா பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பொலிஸார் இருந்தும் சிங்களத்திலேயே முறைப்பாடுகள் பதிவு


யாழ். குடாநாட்டில் வசிக்கும் தமிழ் மக்களின் நலன் கருதி சகல பொலிஸ் நிலையங்களிலும் அண்மையில் கணிசமான தமிழ்ப் பொலிஸார் நியமிக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் செய்யும் முறைப்பாடுகள் தொடர்ந்து சிங்களப் பொலிஸாரால் சிங்கள மொழியிலேயே பதிவு செய்யப்படுகின்றன.
இதனால் முறைப்பாடு செய்வதற்குப் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் மக்களும் பொலிஸாரும் மொழிப் பிரச்சினையால் திண்டாடுவதுடன் தங்கள் பிரச்சினைகளை விரிவாக எடுத்துச் சொல்ல முடியாமலும் இலகுவாகத் தீர்வு காண முடியாமலும் திண்டாடுகின்றனர்.
இதனால் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும் மக்கள் முறைப்பாடு செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
தமிழ் மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள மொழிப் பிரச்சினை காரணமாகப் பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க முன்வந்துள்ள அரசு நேர்முகப் பரீட்சை மூலம் தமிழ் இளைஞர்களைத் தெரிவு செய்து பயிற்சி வழங்கிய பின் சகல பொலிஸ் நிலையங்களிலும் இவர்களை நியமித்துள்ளது.
இந்த நிலையில் பொலிஸ் நிலையங்களில் தொடர்ந்தும் சிங்கள மொழியிலேயே தமிழ் மக்களின் புகார்கள் சிங்களப் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அரசு பொலிஸ் நிலையங்களில் தமிழில் பதிவு செய்யலாம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும் தொடர்ந்து சிங்கள மொழியில் அவை பதியப்படுவது மக்கள் மத்தியில் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அரசு தெரிவித்திருந்தது போல் மக்கள் தங்கள் புகார்களைத் தமிழ் மொழியில் பதிவு செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment