Wednesday, December 21, 2011

இந்திய மீனவர்களை காப்பாற்றினோம் என்கின்றனர் இலங்கை கடற்படையினர்


சீரற்ற காலநிலை காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நெடுத்தீவுக்கருகே கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்திய தமிழக மீனவர்கள் ஆறுபேரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
சீரற்ற காலநிலை காரணமாக குறித்த மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் இழுத்துவரப்பட்டு தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில் நெடுத்தீவுக்கு அருகே கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், குறித்த மீனவர்களை அவதானித்து, அவர்களையும் அவர்கள் பயணித்த படகையும் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
பின்னர் குறித்த மீனவர்கள் ஆறுபேரும் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களனைவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு
இந்திய மீனவர்களை தாங்கள் காப்பாற்றியதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கின் கடற்பகுதியில் நெடுந்தீவு பகுதியில் கடந்த 19 ஆம் திகதி இந்திய மீனவர்களை இவ்வாறு தாம் காப்பாற்றியதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
முதலாவது சம்பவம் ஒன்றில் 12 இந்திய மீனவர்கள் பயணித்த படகு அனர்த்தத்துக்கு உள்ளாகிய வேளையில் அதில் இருந்தவர்களை கடற்படையினர் காப்பாற்றினர்.
பின்னர் அதேநாளில் அனர்த்தத்துக்கு உள்ளான மேலும் 6 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
இதேவேளை நெடுந்தீவு கடற்பகுதியில் கடந்த 18 ஆம் திகதியும் அனர்த்தத்துக்கு உள்ளான 4 இந்திய மீனவர்களை காப்பாற்றியதாக இலங்கை கடற்படையினர் தமது .இணையத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment