Monday, December 12, 2011

சுயாதீனமாக செயற்படுவது எப்படி...?



வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் ஒரு பலவீனமான இனக் குழுவாக மாற்றமடைவதையும் இந்தியா ஊக்குவிக்கின்றது. மலையக மக்களைப் போன்ற நிலையை உருவாக்குவது தான் அதன் இலக்கு. இதுவிடயத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து ஆக்கிரமிப்புக்களுக்கும் இந்தியாவின் அனுசரணை இருக்கின்றது.


லங்கைத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகியுள்ளது. சில மாதங்களாக மறை முகமாக இலங்கையைப் பாதுகாத்து வந்த இந்திய அரசு தற்போது நேரடியாகவே பாதுகாக்கத் தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலிய பொதுநலவாய மாநாட்டில் இலங்கையைப் பாதுகாத்த விதமும் இந்திய இராணுவத் தளபதிகளின் இலங்கை வருகையும் இதனை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. இந்திய வெளிவுறவுச் செயலாளர் மத்தாய் இந்தப் பாதுகாப்பு விடயத்தில் மிகுந்த தீவிரமுடையவராக இருக்கின்றார்.
 
இந்தியாவின் நேரடிப்பார்வை
 
இந்திய வெளிநாட்டுக் கொள்கையின் மூலோ பாயம் இலங்கை அரசைப் பாதுகாப்பதுதான். தற்கால அரசியல் `சூழ்நிலைகளை முன்னிட்டு இப்பாதுகாப்பு நேரடியாகவோ, மறைமுகமாகவோ மேற்கொள்ளப்படலாம். போரின் போது மறைமுகமாகப் பாதுகாத்த இந்திய அரசு, போரின் பின்னர் நேரடியாக இலங்கையைப் பாதுகாத்தது.
 
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மேற்கு நாடுகள் கொண்டு வந்த போர்க் குற்றப் பிரேரணை தோல்வியடைந்ததற்கு இந்தியாவே காரணம். ஆனாலும் பின்னர் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை, சனல்4 காணொளித் தொகுப்பு, ஜெயலலிதாவின் எழுச்சி, தமிழ்நாடு தமிழ் உணர்வாளர்களின் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரம் என்பவற்றால் நேரடியாகப் பாதுகாக்கும் முயற்சியை சற்று அடக்கி வாசித்தது இந்தியா.
 
இறுதியாக நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக்கவுன்சில் கூட்டத்தில் மௌனம் காத்தமை, ஐ.நா. பொதுக்கூட்ட சந்திப்பின் போது "இனப்பிரச்சினையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என மன்மோகன் சிங் ஜனாதிபதி மஹிந்தரிடம் கூறியமை என்பவை யெல்லாம் இந்த அடக்கி வாசித்தலின் விளைவுதான்.
 
முருங்கை மரத்தில் இருந்து
இறங்க மறுக்கும் இந்தியா
 
எனினும் சீனப்படைத்தளபதிகளின் இலங்கை வருகையும் கூட்டுப் பயிற்சி அழைப்பும் இந்த அடக்கி வாசித்தலை முடிவுக்கு கொண்டு வந்தன. இனி சில காலங்களுக்கு நேரடிப் பாதுகாப்புத் தொடரலாம். தமிழ்நாட்டின் எழுச்சிகளே இந்தப் பாதுகாப்பு தொடர்வதை தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும்.
 
ஆஸ்திரேலிய பொதுநலவாய மாநாட்டில் இலங்கை மீது விழ இருந்த எறிகணைகளைக் கவ\ம் போல் நின்று இந்தியா பாதுகாத்தது. இந்தியக் கவசம் இல்லை என்றால் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்தும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு ஒருபோதும் கிட்டியிருக்காது. 
 
இலங்கைக்கு நெருக்கடியைக் கொடுக்கின்ற மனிதஉரிமை ஆணையாளர் பதவியும் உருவாக்கப் பட்டிருக்கும்.
மனித உரிமை விவகாரங்களை நாடுகளின் இறைமைக்கு அப்பாற்பட்ட சர்வதேசா பொது விவகாரமாக மாற்ற இந்தியாவும் விரும்பவில்லை.
 
தனது நாட்டில் தேசிய இனங்களின் போராட்டங்களையும், அடிநிலை சமூகங்களின் வர்க்க ரீதியான போரட்டங்களையும் கொடூரமாக ஒடுக்கும் அரசு இதனை எதிர்த்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத்தான்.
 
கேள்விக்குள்ளான
நம்பகத்தன்மை
 
போர்க்குற்ற விவகாரத்தில் ஐ.நா. நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானது போல், பொதுநலவாய நாடுகளின் நம்பகத்தன்மையும் கேள்விக்குள்ளாகியுள்ளது. மனித உரிமை அமைப்புக்கள் மட்டுமே மனந்தளராது புதிய முயற்சிகளை மேற்கொள்கின்றன.
 
சனல்4 இன் இரண்டாவது காணொளி, சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டம் என அவற்றின் முயற்சிகள் தொடருகின்றன. வல்லரசுகளின் அரசியல் நலன்களுக்கு முன்னே மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைவது தான் அவர்களைப் பொறுத்தவரை மிகப்பெரிய சோகம்.
 
இவற்றின் வற்புறுத்தல்களால் மேற்குலகம் சற்று அழுத்தங்களைக் கொடுக்க முன்வந்தாலும் அவை இந்தியாவைத் தாண்டி வருகின்ற போது பலவீனமடைகின்றன. இதனால் தான் மேற்குலகின் அழுத்தங்கள் எந்தக் காலகட்டத்திலும் வன்மையான அழுத்தங்கள் என்ற நிலைக்கு மாறவில்லை. தென்னாசியாவில் இந்தியா தொடர்பான நலன்கள் அதிகளவில் மேற்குலகுக்கு இருப்பதே இதற்கு காரணம்.

இந்தியாவின் பலவீனங்கள்
 
இந்தியாவின் பலவீனங்களும், மேற்குலகின் பலவீனங்களும் ஜனாதிபதிக்கு நன்றாகவே தெரியும். அவர் அதற்குத்தக்கதாக ஓடி காய்களை நகர்த்துகின்றார். பெரிய நாடுகள் போல் நிலையான வெளிநாட்டுக் கொள்கையை அவர் பின்பற்றுவதில்லை. அந்தந்த நேரத்துக்கேற்ற வெளிநாட்டுக் கொள்கையையே பின்பற்றுகின்றார்.
 
சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் செல்வாக்குக்கு உட்பட்டுவிடும் என்ற அச்சமும், ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் மேற்குலகின் செல்வாக்குக்கு உட்பட்டுவிடும் என்ற அச்சமும் இந்தியாவுக்கு உண்டு. எனினும் இரண்டு கட்டங்களிலும் வேறுவேறு தந்தி ரோபாயங்களை பின்பற்றுவது தான் இந்தியாவின் வழக்கம்.

இரு வேறுபட்ட தந்திரோபாயங்கள்
 
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அச்சுறுத்தல் தந்திரோபாயத்தையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் சலுகைத் தந்திரோபாயத்தையும் பின்பற்றுவதே இந்தியாவின் அணுகுமுறையாக உள்ளது.
 
இந்த சலுகைகளின் அடிப்படையில் தான் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம், கச்சதீவு ஒப்பந்தம் என்பன கைச்சாத்திடப்பட்டன. இந்தப் போக்கு காங்கிரஸ் கட்சியின் காலத்திலேயே அதிகமாக நிலவுகின்றது. இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என எவரும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. ஏனைய கட்சியின் ஆட்சிக் காலத்தில் இலங்கையைப் பாதுகாப்பது மூலோபாயமாக இருந்தாலும் அவை அடக்கிவாசிக்க முயன்றன.
 
இந்த மரபுதான் தற்போதும் தொடர்கின்றது. இந்த செயற்பாட்டுக்கு ஒரு கருவிதேவை. அக்கருவியாக ஆரம்பத்தில் மலையக மக்கள் இருந்தனர். தற்போது வடகிழக்கு மக்கள் இருக்கின்றனர்.
 
தனது நலனுக்காக இக் கருவிகளை விலையாகக் கொடுப்பதற்கும் இந்தியா ஒருபோதும் தயங்கியதில்லை. இந்தக் கருவிகள்தான் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதிலும் அது கவனமாக உள்ளது. அதற்காக அது ஒரு பலவீனமான இனக்குழுவாக மாறுவதையே விரும்புகின்றது. மலையக மக்கள் இந்தியாவின் செயற்பாட்டாலேயே பலவீனமான இனக்குழுவாக மாற்றப்பட்டனர்.

மலையக மக்களின் அரசியல் நிலைமை
 
ஸ்ரீமாசாஸ்திரி ஒப்பந்தத்தின்படி மலையக மக்களில் ஒரு பகுதியினர் நாடு கடத்தப்படாமல் இருந்திருந்தால் இன்று அவர்களது அரசியல் பலத்தை நினைத்தே பார்த்திருக்க முடியாது.
 
இதைத்தான் மனோகணேசன் "மலையக மக்களை முழுமையாக இந்தியாவுக்கு கொண்டு சென்றிருக்க வேண்டும் அல்லது முழுமையாக இலங்கையில் விட்டிருக்க வேண்டும். இருபிரிவாக விட்டதனால் இலங்கையில் மலையக மக்கள் பலவீன மடைந்துள்ளனர்' எனக் கூறியிருக்கின்றார்.
 
தற்போது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தியாவின் செல்வாக்கினுள் இருப்பதால் பலவீனமாக உள்ளது. வேறுவேறு அரசியல் இயக்கங்கள் வளர்வதற்கு இந்தியா இடங்கொடுப்பதில்லை. எல்லா மலையககட்சிகளும் மஹிந்தரின் கூடாரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல் இந்தியாவிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
 
இதே நிலைக்குத்தான் வடகிழக்கையும் இந்தியா தயார்படுத்துகின்றது. புலிகள் இருக்கும்வரை வடகிழக்கு அரசியலில் இந்தியாவினால் கால்பதிக்க முடியவில்லை. தற்போது கூட்டமைப்பு இந்தியாவின் செல்வாக்கினுள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
 
 தமிழ்த்தேசிய அரசியலின் தொடர்ச்சி புலம்பெயர் நாடுகளில் இருப்பதனாலும் ஒப்பீட்டு ரீதியில் ஜனநாயக வெளி அங்கு அதிகமாக இருப்பதினாலும் தமிழ்த்தேசியத்திற்கான அரசியல் செயற்பாடு அங்குதான் அதிகமாக இருக்கின்றது. தமிழ்த்தேசியத்துக்கான அடித்தளம் புலம்பெயர் நாடுகளில் வலுவாக இருப்பதால் இந்தியா தன் கொள்கைகளை தமிழ்மக்களிடம் விற்க முடியவில்லை. 
 
எனினும் சம்பந்தனிடமும் ஆனந்தசங்கரியிடமும்தான் தமிழ் அரசியல் தலைமை இருப்பதை இந்தியா விரும்புவதாகச் சொல்லப்படுகின்றது. இதற்கு மாற்றாக இந்தியச் செல்வாக்குக்கு உட்படாத வேறு தலைமைகள் உருவாவதை எப்படியாவது தடுக்கவே முனை கின்றது.
 
தமிழ் உணர்வாளர்களின் செயற்பாடு
 
தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆரம்பகட்ட எழுச்சியுடன் தமிழ் உணர்வாளர்களின் கை சற்று ஓங்கியிருந்தது. காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மோசமாக வீழ்ச்சியடைந்தமைக்கும் தமிழ் உணர்வாளர்கள்தான் காரணம். அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் 5 வீதமான வாக்குகளே காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தது.
 
காங்கிரஸ் தலைமைக்கு இது கவலையாக இருந்தாலும் இலங்கை அரசினைப் பாதுகாப்பதற்காக தமிழ் நாட்டை இழப்பதற்கும் தயாராக இருக்கின்றது. தற்போது ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு முடுக்கி விடப்பட்டதால் அவரும் அடக்கி வாசிக்கின்றார்.
 
தமிழ்நாட்டில் உள்ள முன்னேறிய பிரிவினர் மத்தியில் போராட்டத்தை தங்களால் பாதுகாக்க முடியவில்லையே என்ற கவலையும் குற்ற உணர்வும் இருக்கின்றது. இது தமிழ் நாட்டில் ஒரு தமிழ்த் தேசியம் வளர்வதற்தகான சூழலையும் உருவாக்கியுள்ளது. முன்னேறிய பிரிவினர் தாங்களாகவே இது தொடர்பாக பல கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
 
இந்திய அரசு இலங்கையில் தமிழ்த்தேசிய அரசியலை பலவீனப்படுத்திவிட்டால், தமிழ்நாட்டிலும் அது பலவீனப்பட்டு விடும் என நினைத்து காய்களை நகர்த்துகின்றது.

இந்தியாவின் இலக்கு
 
மறுபக்கத்தில் வடகிழக்கில் தமிழ் மக்கள் ஒரு பலவீனமான இனக் குழுவாக மாற்றமடைவதையும் இந்தியா ஊக்குவிக்கின்றது. மலையக மக்களைப் போன்ற நிலையை உருவாக்குவதுதான் அதன் இலக்கு. இதுவிடயத்தில் அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து ஆக்கிரமிப்புக்களுக்கும் இந்தியாவின் அனுசரணை இருக்கின்றது.
 
போருக்குப் பின்னர் சிங்களக் குடியேற்றம் இடம் பெறுகின்ற போதும் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்ற போதும் இந்தியா எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. சம்பூர் மக்களின் வெளியேற்றம் இந்திய அனல் மின்நிலையத்தினைச் சாட்டியே மேற்கொள்ளப் படுகின்றது. இந்த வெளியேற்றம் பற்றி இந்தியா வாய்திறக்கவேயில்லை.
 
வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் 30வீதச் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொள்ளல் என்ற இலக்கை நோக்கி அரசு செயற்படுகின்றது. அதற்கேற்ற வகையில் புதிய உதவி அரச செயலாளர் பிரிவுகளை உருவாக்குகின்றது. அரச அதிபர்களை இடமாற்றம் செய்கின்றது.
 
இன விகிதாசாரத்தை
மாற்றும் துரித செயற்பாடு
 
கிழக்கில் இனவீதாசாரத்தை மாற்ற இலங்கை அரசுக்கு 60 வருடம் சென்றது. வடக்கின் வீதாசாரத்தை 15 வருடங்களுக்குள் மாற்றிவிடுவார்கள் போலத் தெரிகின்றது என சம்பந்தன் கூறுகின்றார்.
 
தமிழ் மக்களுக்கு இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசும் எதிரிதான். இலங்கை அரசில் தங்கியுள்ள டக்ளஸ் தேவானந்தாவால் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பாக எதுவும் செய்ய முடியாதோ அதுபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவின் செல்வாக்கின் கீழ் இருக்கும்வரை எதுவும் செய்ய முடியாது.
 
ஒரு கட்சி சுயாதீனமாக இருந்து கொண்டு இந்தியாவுடன் நட்புறவைப் பேணுவது என்பது வேறு. இந்தியாவின் செல்வாக்கினுள் கரைந்து விடுவது என்பது வேறு. இது விடயத்தில் சுயாதீனமாக செயற்பட்டு, தமது வாக்குப் பலத்தால் பேரம்பேசும் தொனியை தமிழ்க்கட்சிகள் இனியாவது வளர்க்க முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment