Saturday, December 10, 2011

யாழ்ப்பாணத்தில் மனித உரிமை தினப் பேரணி!- பொலிஸார் - பொதுமக்கள் முறுகல்

         மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டப் பேரணியின்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது ஊடகவியலாளர்கள் சிலரும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியும், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த மக்கள் இன்று காலை யாழ். நகர பஸ் நிலையத்தின் முன்பாகக் கூடினர்.
அவ்வேளையில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸாரும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் சமுகமளிக்காத காரணத்தினால் பொதுமக்களை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு பொதுமக்களைப் பொலிஸார் கேட்டுள்ளனர். பொலிஸாரின் கூற்றுக்குச் செவிமடுக்காத பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன்பின்னர் அங்கு வருகை தந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துமாறு அவரிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேரணி நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் யாழ். நகர பஸ் நிலையத்துக்கு அருகில் காத்திருந்தபோது அங்கு ஜீப்பில் வந்த பொலிஸார் புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை எச்சரித்ததுடன், படங்களைக் கமராவிலிருந்து அழித்துவிடுமாறும் கூறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ். சென்ற காணாமல் போனோரை தேடியறியும் குழுவின் உறுப்பினர்கள் 38 பேர் பொலிஸாரினால் தடுத்து வைப்பு
காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்ற காணாமல் போனோரை தேடியறியும் குழுவின் உறுப்பினர்கள் 38 பேரை அவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள விடாது பொலிஸார் தடுத்து வைத்துள்ளதாக காணாமல் போனோரை தேடியறியும் குழுவின் இயக்குநர் சுந்தரம் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் தற்போது நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிடாது தடுக்கும் வகையிலேயே இவர்கள் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ். தாதியர் பயிற்சி கல்லூரிக்கு முன்பாக மேற்படி 38 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மகேந்திரன் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment