Wednesday, December 21, 2011

பேராதனை பல்கலை.மாணவர்களின் பேரணிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு


தனியார் பல்கலைக்கழகம் ஆரம்பித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தவிருந்த பேரணியை கைவிடுமாறு கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று புதன்கிழமை பேராதனையில் இருந்து கொழும்புவரை மேற்கொள்ள தீர்மானித்துள்ள பேரணியை கைவிடுமாறே கண்டி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இப்பேரணி தொடர்பாக, பேராதனை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் பேரணியை கைவிடுமாறு மாணவர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிளுக்கு உத்தரவிட்டுள்ளது.
பேரணி நடைபெற்றால் கொழும்பு - கண்டி வீதி போக்குவரத்து பாதிப்பு, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு, சமாதானம் சீர்குலையும், மோதல் நிலை ஏற்படும் உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற் கொண்டு நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, நீதிமன்ற உத்தரவை அடுத்து தற்போது பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

'கைது செய்யப்பட்ட அறுவரை விடுதலை செய்' , 'ஊழலை நிறுத்து' போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது கண்டி கலஹா சுற்று வட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிக எண்ணிக்கையிலானோர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment