Saturday, December 31, 2011

யாழில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி : யாழ். முதல்வர் தெரிவிப்பு


யாழில் இந்திய கலாச்சார மையம் அமைப்பதற்கான கட்டிட வரைபடம் யாழ்.மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று யாழ். மாநகரசபை எல்லைக்குட்பட்ட நூலகத்தில் கட்டுவதற்கான அனுமதி கிடைத்திருப்பதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.மாநகர சபையின் ஒத்திவைக்கப்பட்ட 10ஆவது கூட்டத்தொடர் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் பரதிபலிக்கும் வகையில் இந்தியக் கலாச்சார மையம் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
இந்த இந்தியக் கலாசார மையம் திறப்பு விழாவில் இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்வும் நடைபெறுவதற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சபையில் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினர் கடத்தப்பட்டு கொலை


கம்பஹா மாவட்டத்தில் மினுவங்கொட பிரதே சபையின் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் இந்திக்க சந்திரசிறி என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்ட இந்திக்க, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், மினுவங்கொட கொட்டாதெனிய மாவுஸ்ஸா என்னும் இடத்தில் அவரின் சடலம் மீட்கப்பட்டதாகவும்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுண்ட இந்திக்க சந்திரசிறிக்கு எதிராக, பெண் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2004ம் ஆண்டு இடம்பெற்ற இக்கொலைச் சம்பவம்  தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த இந்திக்க ஏற்கனவே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
எனவே, முன் விரோதம் காரணமாக இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளமும் உடலும் நலிவுற்றாலும், நித்திரை விழித்து கல்வியில் முத்திரை பதித்துள்ள ஈழத்தமிழினம்


இலங்கை அரசின் அடக்குமுறைக்குட்பட்ட வாழ்வின் மத்தியிலும் இராணுவ நடமாட்டத்தின் நெருக்கடியின் மத்தியிலும் நமது ஈழத்தமிழ் உறவுகளின் வாழ்வியல் அங்கே நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அந்த அரசியல் உயர் பீடத்தில் அமர்ந்து கொண்டு இந்த மாங்கனித் தீவில் நமது தமிழ் மக்களையும் அவர்தம் வாரிசுகளான இளைய தலைமுறையினர், மாணவ மாணவிகள் ஆகியோரை வதைத்தும் உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் கொடுமைக்குள்ளாக்கும் அரசாங்கங்கள் எத்தனையோ ஆண்டுகளாக நடத்தி வரும் அடக்குமுறை ஆட்சிக்கெதிராக முதலில் சாத்வீகப் போராட்டங்களையும் பின்னர் ஆயுதப் போராட்டத்தையும் நடத்திய நமது இனம் அரசியல் ரீதியிலான போராட்டத்தில் மீண்டும் இலங்கையின் கொடிய அரசினால் அடக்கப்பட்டு தனது சுயத்தை இழந்த ஒரு இனமாக அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
பெயரளவில் அங்கு தமிழ் மொழிக்கு சுதந்திரம் என்று சொன்னாலும் தமிழர் பிரதேசங்களில் தமிழ் மொழியிலேயே அரசின் நிர்வாகம் நடைபெறுகின்றது என்று கூறப்பட்டாலும் வடக்கிலும் கிழக்கிலும் ஆளுநர் மற்றும் இராணுவ உயர் பதவிகளில் எல்லாம் பெரும்பான்மை மொழி பேசும் அதிகாரிகளை நியமித்து அவர்கள் மூலம் சிங்கள பெரும்பான்மையினத்தின் அடக்குமுறை வடிவத்தை மறைமுகமாக அறிமுகம் செய்து வருகின்றது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் அநேக பெரும்பான்மை மொழி பேசும் ஊழியர்களை சேவைக்கு அமர்த்தி அதன் மூலம் அவர்களின் பிள்ளைகளோ அன்றி உறவினர்களோ கல்வி கற்பதற்கு வசதியாக தமிழர் பிரதேசங்களில் எல்லாம் சிங்கள பாடசாலைகளை நிறுவி வருகின்ற இந்த அரசாங்கத்தின் கபட நோக்கம் எமது மக்களுக்கு புரியாதது அல்ல.
மறுபக்கத்தில் பெரும்பான்மை இன மக்களின் சமய வழிபாட்டுக்காக என்று சொல்லி  பௌத்த விகாரைகளை தமிழர் பிரதேசங்களில் கட்டி எழுப்பி அவற்றுக்கு அருகே அல்லது உள்ளே பெரிய அளவிலான புத்தர் சிலைகளை எழுப்பி…இவ்வாறாக ஏற்கனவெ தமிழின் மணம் கமழ்ந்த இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளை சிங்களத்தின் சிதறல் காற்று வீசும்படியான முயற்சிகளை இந்த அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகின்றது..
இவ்வாறு மிகவும் மோசமான அடக்கு முறை மற்றும் தமிழ் மாணவர்கள் மீதான கொடிய இராணுவ இம்சைகள், பொருளாதாரத் தடைகள் ஆகியன விடுக்கப்படுதல், ஆயுதங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மத்தியில் நமது மாணவ மணிகள் அங்கு நித்திரை விழித்து தங்கள் பாடங்களைக் கற்று பொதுப் பரீட்சைகளில் முத்திரை பதித்துள்ளார்கள்.
ஆமாம் நமது மாணவச் செல்வங்கள் பலர் கடந்த வாரம் வெளிவந்த இலங்கை முழுவதற்குமான உயர்தர பரீட்சையில் வெற்றிபெற்றுள்ளனர். அந்த மாணவச் செல்வங்களில் இருவர்
அண்மையில் வெளிவந்த க.பொ.த (உயர் தர) பரீட்சையில் சாதனை படைத்துள்ளனர்.
உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவன் செல்வன் கமலவண்ணன் கமலவாசன் அகில இலங்கையிலும் கணிதப் பிரிவில் முதலிடத்தையும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மாணவன் சஞ்சயன் ஆனந்தராஜா விஞ்ஞானப் பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்று ஈழத்தமிழ் மக்களுக்கு புகழையும் அவர்களது பெற்றோர்களுக்கு பெருமையையும் தேடித் தந்துள்ளார்கள்.
இந்த மாணவச் செல்வங்கள் நமது தமிழ் மாணவர்களோடு மட்டும் கல்விப் போட்டிகளில் மோதவில்லை. முழு இலங்கைக்கும் பொதுப் பரீட்சையாக நடத்தப்படும் இதில் கல்வித்துறை சார்ந்த பெரும் வசதிகளைக் கொண்ட நகர்ப்புறத்து சிங்களப் பாடசாலைகளில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களோடு “கல்விப் போட்டிகளில்” மோதியே வெற்றிகளை அடைந்துள்ளார்கள்.
தமிழ் மாணவர்கள் அடைந்த வெற்றி சிங்கள பெற்றோருக்கு மாத்திரமன்றி பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளுக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கொழும்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை யாழ்;ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வியியல்துறையின் பேராசிரியரும் தற்போது கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் குறுகிய கால பணிக்காக அழைக்கப்பட்டவருமான பேராசிரியர் மா. சின்னத்தம்பி கனடா உதயன் பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதி வந்த யாழ்ப்பாணத்தில் கல்வி என்னும் பெயரிலான கட்டுரைகளின் தொகுதி நூலாக வெளிவந்துள்ளது.
இதன் வெளியீட்டு விழா கனடாவில் நடைபெற்றபோது பல கனடிய அன்பர்கள் கலந்துகொண்டு மேற்படி நூலின் பிரதிகளை பெற்றுக்கொண்டு நமது தாயகத்தில் வறுமையினால் வாடும் சில மாணவர்களின் கல்விப் பசியை போக்கும் கைங்கரியத்திற்கு உதவிகளை வழங்கிச் சென்றார்கள்.
இதேவேளை கனடாவில் இரண்டு தமிழ் மாணவர்கள் வேற்றின மாணவர்களோடு போட்டியிட்டு கொம்பியூட்டர் விஞ்ஞானத் துறையில் வெற்றிகளை ஈட்டியுள்ளார்கள். கனடாவில் புகழ்பெற்ற ஐபிஎம் நிறுவனம் கனடாவின் பாடசாலைகளுக்கிடையே நடத்திய High School Computer Programming  போட்டியில் ஈழத்தமிழ் மகன் கஜன் இலங்கேஸ்வரன் தலைமையிலான Bramton Fletcher’s Medow உயர் கல்லூரி மாணவர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது.
கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள சுமார் 40 பாடசாலைகள் பங்குபற்றிய மேற்படி போட்டியில் கஜன் இலங்கேஸ்வரன் மற்றும் ஹர்சன் நித்தியானந்தன் ஆகியோர் அடங்கிய குழு வெற்றி பெற்றுள்ளது.
இவ்வாறாக நவீன கற்றல் வசதிகளைக் கொண்ட மேற்குலக நாடுகளிலும், மறுபக்கத்தில் மிகக்குறைந்த கற்றல் வசதிகளைக் கொண்ட நமது தாயக மண்ணிலும் நமது மாணவச் செல்வங்கள் அடையும் கல்வியியல் வெற்றிகள், நமது எதிர்கால சமூக, கலாச்சார மற்றும் அரசியல் பலத்தையும் ஈட்டித்தரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போமாக
கனடா உதயன் கதிரோட்டம் 

பெறுபேறு சர்ச்சைக்கு தீர்வாக வாழ்க்கை முழுவதும் ஒரே சுட்டெண் அறிமுகம்

பரீட்சை பெறுபெறுகளில் ஏற்படும் சர்ச்சைகளை தீர்க்கும் நோக்கில் வாழ்க்கை முழுவதும் பயன்படுத்தக் கூடிய ஒரே சுட்டெண்ணை அறிமுகம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்திகள் தோற்றும் சகல பரீட்சைகளிலும் ஒரே சுட்டெண்ணை பயன்படுத்தக் கூடிய சாத்தியம் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் ஆராய்ந்து வருவதாகவும், அநேகமாக இந்த சுட்டெண் தேசிய அடையாள அட்டையாக அமையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுட்டெண் பிரச்சினையினால் இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் பல்வேறு குழப்ப நிலைமைகள் எழுந்திருந்ததன.
எனவே, எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் இலங்கை பரீட்சை திணைக்களம் ஒரே சுட்டெண் திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம் மற்றும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய பரீட்சைகளில் ஒரே பரீட்சை சுட்டெண்ணைப் பயன்படுத்துவதனால் குழப்ப நிலைமைகளை தவிர்க்க முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் போது பயன்படுத்தும் சுட்டெண்ணை வாழ்க்கை முழுவதிலுமான பரீட்சைகளுக்கு பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் ஆளும் பங்காளிக் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சு


நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அடுத்த வாரத்தில் ஆளும் கட்சியின் அங்கத்துவ கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாக ஆளும் கட்சியின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஈபிடிபி உட்பட்ட கட்சிகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கடந்த வாரத்தில் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டிருந்ததையடுத்தே, ஜனாதிபதி ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் சபை அமர்வுக்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆளும் கட்சியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் விருப்பம் கொண்டுள்ளதாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேசத்தின் அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன்னார் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கம்யூனிஸக் கட்சியின் சார்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டியூ. குணசேகர தெரிவித்துள்ளார்.

யாழ். குடா பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பொலிஸார் இருந்தும் சிங்களத்திலேயே முறைப்பாடுகள் பதிவு


யாழ். குடாநாட்டில் வசிக்கும் தமிழ் மக்களின் நலன் கருதி சகல பொலிஸ் நிலையங்களிலும் அண்மையில் கணிசமான தமிழ்ப் பொலிஸார் நியமிக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்கள் செய்யும் முறைப்பாடுகள் தொடர்ந்து சிங்களப் பொலிஸாரால் சிங்கள மொழியிலேயே பதிவு செய்யப்படுகின்றன.
இதனால் முறைப்பாடு செய்வதற்குப் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும் மக்களும் பொலிஸாரும் மொழிப் பிரச்சினையால் திண்டாடுவதுடன் தங்கள் பிரச்சினைகளை விரிவாக எடுத்துச் சொல்ல முடியாமலும் இலகுவாகத் தீர்வு காண முடியாமலும் திண்டாடுகின்றனர்.
இதனால் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும் மக்கள் முறைப்பாடு செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
தமிழ் மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள மொழிப் பிரச்சினை காரணமாகப் பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பொலிஸாரை நியமிக்க முன்வந்துள்ள அரசு நேர்முகப் பரீட்சை மூலம் தமிழ் இளைஞர்களைத் தெரிவு செய்து பயிற்சி வழங்கிய பின் சகல பொலிஸ் நிலையங்களிலும் இவர்களை நியமித்துள்ளது.
இந்த நிலையில் பொலிஸ் நிலையங்களில் தொடர்ந்தும் சிங்கள மொழியிலேயே தமிழ் மக்களின் புகார்கள் சிங்களப் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அரசு பொலிஸ் நிலையங்களில் தமிழில் பதிவு செய்யலாம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும் தொடர்ந்து சிங்கள மொழியில் அவை பதியப்படுவது மக்கள் மத்தியில் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அரசு தெரிவித்திருந்தது போல் மக்கள் தங்கள் புகார்களைத் தமிழ் மொழியில் பதிவு செய்வதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Thursday, December 29, 2011

யாழில் கடல் கொந்தளிப்பு! மீனவர்கள் தொழிலுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர்



யாழ்.குடாக்கடலில் கொந்தளிப்பு நிலை தொடர்வதால் மீனவர்கள் இன்று இரவு மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு செல்வதை தவிர்க்கும்படி யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர் எஸ். ரவீந்திரன் மீனவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
தீவுப்பகுதி, வடமராட்சி கிழக்கு, வல்வெட்டித்துறை, யாழ்.குடாக்கடல், முல்லைத்தீவுப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பான நிலையில் இருப்பதாகவும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் தெரவித்துள்ளதுடன், மறு அறிவித்தல் வரும் வரைக்கும் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

துணிகளுக்கு பயன்படும் வர்ணங்களை உணவில் சேர்த்து விற்பனை செய்த இருவர் கைது

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில், துணிகளுக்கு பயன்படும் வர்ணக் கலவையை உணவுகளுக்கு பயன்படுத்தி விற்பனை செய்த இரண்டு விற்பனையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாநகர பொது சுகாதார உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவை கண்டறியப்பட்டதாக மாநகர சபையின் பிரதம பொது சுகாதார அதிகாரி பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
புடவைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒருவகை வர்ணம், உணவுகளில் சேர்க்கப்பட்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர பிரதம பொது சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், காலிமுகத்திடலில் உணவு விற்பனையில் ஈடுபடுகின்றவர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த விற்பனையாளர்களுக்கு இன்று முதல் விசேட சீருடை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பயிற்சியை உரிய முறையில் நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாகவும் பிரதீப் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

கல்வித்துறையில் அதிகரித்துள்ள இலஞ்ச முறைப்பாடுகள்


யாழ்.குடாக்கடலில் கொந்தளிப்பு நிலை தொடர்வதால் மீனவர்கள் இன்று இரவு மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு செல்வதை தவிர்க்கும்படி யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் வளத்துறைப் பணிப்பாளர் எஸ். ரவீந்திரன் மீனவர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.
தீவுப்பகுதி, வடமராட்சி கிழக்கு, வல்வெட்டித்துறை, யாழ்.குடாக்கடல், முல்லைத்தீவுப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பான நிலையில் இருப்பதாகவும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாகவும் தெரவித்துள்ளதுடன், மறு அறிவித்தல் வரும் வரைக்கும் கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு மோதரைப் பகுதியைச் சேர்ந்தவர் களனி ஆற்றில் சடலமாக மீட்பு

கொழும்பு மோதரைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரொருவரின் சடலமொன்று, களனி ஆற்றிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - 15, மோதரைப் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் (வயது-36) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் நீண்ட காலமாக மீன் வியாபாரம் செய்து வருவதாகவும், இச்சம்வம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு பா.உ சிறிதரனின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள்


கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக பரவலாக அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் ஏற்பாட்டில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் பளை, புலோப்பளை கிழக்கு, உருத்திரபுரம் வடக்கு, சக்திபுரம், பரந்தன், கமறிக்குடா உதயநகர் கிழக்கு மற்றும் விவேகானந்த நகர், கனாகாம்பிகைக் குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பிரதேச கட்சி அமைப்பாளர் சுரேன், கரைச்சி பிரதேசசபை தவிசாளர் நா.வை. குகராசா, கரைச்சி பிரதேசசபை உப தவிசாளர் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் குமாரசிங்கம் ஆகியோரின் தலைமையில் மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பணிமனையான அறிவகத்தில் இருந்து பா.உறுப்பினரின் ;செயலாளர் பொன்.காந்தன், அமைப்பாளர் வேழமாலிகிதன் மற்றும் ஜோன் வசந்தன் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.

பகவத் கீதையை தடை செய்யக் கோரிய மனு நீதிமன்றால் நிராகரிப்பு


ரஷ்யாவில் பகவத் கீதையை தடை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை அந்த நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ரஷ்ய சட்டத்திற்கு முரணான விதத்தில் பகவத் கீதை அமைந்திருப்பதாக தெரிவித்து, பகவத் கீதையைத் தடை செய்யுமாறு சைபீரியன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ரஷ்ய அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியதுடன், தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும், சர்வதெச ரீதியிலும் இது குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பகவத் கீதையை தடைவிதிக்கக் கோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் இன்று தடை செய்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றிய 116 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்


கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 116 மாணவர்கள் பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக, அவர்களின்  பரீட்சைப் பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்காமை, பரீட்சார்த்திக்கு பதிலாக வேறு நபர்கள் பரீட்சைக்குத் தோற்றியமை, விடைத்தாளில் வெவ்வேறு கையெழுத்துக்கள் காணப்பட்டமை போன்ற குற்றங்களின் அடிப்படையில் மாணவ, மாணவியரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சை மத்திய நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய மாணவர்களின் பெறுபேறுகளும் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மற்றும் பழைய பாடத்திட்டங்களின் கீழ் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் இதில் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமானது என பரீட்சை மேற்பார்வையாளர்களினால் செய்யப்படும் முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான வீசாவை இந்தோனிசியா தளர்த்தவுள்ளது


இந்தோனேசியா அடுத்த வருடம் முதல் இலங்கை, பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான வீசா அனுமதியில் தளர்வுகளை கொண்டு வரவுள்ளது.
இதனையடுத்து இந்த வீசா தளர்வு இந்தோனேசியாவில் அகதிகளின் அதிகரிப்பை தீவிரப்படுத்தும் என்று அந்த நாட்டின் புலனாய்வு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே, இலங்கையர்கள் உட்பட்டவர்கள் இந்தோனேசியாவை இடைத்தளமாகக்கொண்டே அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
இந்தோனேசியாவுக்குள் 10 வீதமான இலங்கையர்களே சட்டப்பூர்வமாக பிரவேசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 90 வீதமானோர் சட்டரீதியற்ற வகையிலேயே அந்த நாட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையர்கள் உட்பட்ட 2800 பர் தற்போது இந்தோனிசியாவில் அகதிகளாக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது

ஐ.தே.க. உறுப்பினர் தயாசிறிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
அவர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது.
கட்சித் தலைவர் உட்பட முக்கிய பதவிகளுக்காக அண்மையில் சிறிகொத்தவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மோசடியானது என தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், சிரேஸ்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்சியின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையில் தயாசிறி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க தற்போது வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதனால், அவர் நாடு திரும்பியதன் பின்னர் விசாரணை நடத்தப்பட உள்ளது.
தயாசிறி ஜயசேகர மீதான குற்றச்சாட்டுக்கு ஆதரமாக காணொளி ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
இந்தநிலையில் அவருக்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட ஒழுக்காற்று விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட உள்ளது.

அரசினால் அப்பாவி மாணவர்களின் பெறுபேறுகள் சீர்குலைக்கப்பட்டுள்ளன : சரத் பொன்சேகா


அப்பாவி மாணவ, மாணவியரின் பெறுபேறுகள் சீர்குலைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். 
கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் பெறுபேறுகளை இந்த அரசாங்கம் திரிபுப்படுத்தி வெளியிட்டுள்ளது.
இதுதான் அரசாங்கம் மக்களுக்கு செய்யும் நியாயமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரீட்சை பெறுபேறுகளை சரியான முறையில் வெளியிட முடியாத நிலையில் அரசாங்கம் அபிவிருத்தி குறித்து பேசுவது பைத்தியக்காரத்தனமானது.
பள்ளக்கில் பவணி வருவது போன்று இலங்கை அரசாங்கம் பிரசாரம் செய்தாலும், அதன் பயணம் என்னவோ நடை பயணம் தான் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக தனியார் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர் : தீர்வுத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை?


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டு ஜனவரி நடுப்பகுதியில் இலங்கை செல்லவுள்ளார்.
இதன் போது அவர் இங்கு பலதரப்பினரையும் சந்தித்தித்துப் பேசவுள்ளதாக ராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் கிருஷ்ணாவின் இந்த விஜயம் அரசு தமிழ்க் கூட்டமைப்பு இடையே நடைபெறும் பேச்சுக்கள் தொடர்பாக இந்திய அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டை இருதரப்புக்கும் வலியுறுத்துவதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
காணி, காவற்துறை அதிகாரங்களைப் பகிர்வது குறித்த விவகாரத்தால் அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுகள் இக்கட்டான ஒரு நிலையில் உள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வில் காணி, காவற்துறை அதிகாரங்களை வழங்க முடியாது என அரசு பகிரங்கமாகவே தெரிவித்து வருகிறது.
அப்படியான ஒரு தீர்வை ஏற்கவே மாட்டோம் என பதிலுக்கு கூட்டமைப்பும் தெரிவித்து விட்டது. இதனால் அரசு கூட்டமைப்பு இடையேயான பேச்சுக்கள் முறிவடையக்கூடிய நிலையை எட்டியுள்ள வேளையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது. அதிகாரப் பகிர்வு குறித்துக் கிருஷ்ணா இருதரப்புகளுடனும் பேச்சு நடத்துவார் எனவும் கொழும்பிலுள்ள உயர்மட்ட இராஜதந்திர தரப்புத் தகவல்கள் நேற்றுத் தெரிவித்தன.
இரண்டு தினங்கள் கொழும்பில் தங்கியிருக்கும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட்ட தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடனும் கிருஷ்ணா நேரடிப் பேச்சுகளை நடத்தவுள்ளார்.இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக் கப்பட்டுவரும் வடக்கு வீடமைப்புத் திட்டத்தையும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் பார்வையிடவுள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

மனைவியை தீ வைத்துக் கொன்ற கணவன் : திருமலையில் சம்பவம்


தனது கணவரால் தீ மூட்டப்பட்டு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் திருக்கோணமலை - உப்புவெளி சுனாமி வீட்டுத்திட்ட கணேசபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கணவன் - மனைவிக்கு இடையில் கடந்த 2011-12-17 அன்று ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் சென்று முடிந்தபோது ஆத்திரமடைந்த கணவன் மனைவியை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.
இதன்போது கடும் தீ காயங்களுக்கு உள்ளான மனைவி திருக்கோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 24 வயதுடைய இளம் குடும்பப்பெண்ணான கணேசபுரத்தைச் சேர்ந்த பத்மநாதன் இந்திராதேவி என்பவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tuesday, December 27, 2011

உயர்தர பரீட்சையில் தேசிய ரீதியில் கணித,வர்த்தக, விஞ்ஞான,கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்றோர்


கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில்  அகில இலங்கை ரீதியில் கணிதம், வர்த்தகம், விஞ்ஞானம் மற்றும் கலைப் பிரிவுகளில் முதலிடம் பெற்றோர் விபரங்கள் அறியக்கிடைத்துள்ளது.
இதன் பிரகாரம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கணித பிரிவில்  யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலை மாணவரான கமலக்கண்ணன் கமலவாசன்  தேசிய ரீதியாக முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
வர்த்தகப் பிரிவில் தெபருவௌ தேசிய பாடசாலையின் இசாரா தில்ஹானி கமகே என்ற மாணவி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
விஞ்ஞானப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியின் ருவன் பத்திரன என்ற மாணவர் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
கலைப்பிரிவில் கேகாலை சென் ஜோன்ஸ் மகளிர் வித்தியாலய மாணவி சஜின்தனி சௌசல்யா சேனாநாயக்க முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

கீரிமலை இந்து மயானம்! மக்கள் போராட்டத்தின் பின் பாவனைக்காக கடற்படை அனுமதி


வலிகாமம் வடக்கு கீரிமலை பகுதியில் கடந்த 21வருடங்களாக மூடப்பட்டிருந்த செம்மண்காடு இந்து மயானம் பிரதேச மக்களின் கடுமையான போராட்டத்தையடுத்து நேற்று முதல் மக்கள் பாவனைக்காக கடற்படையினரால் திறந்து விடப்பட்டிருக்கின்றது.
கடந்த 21வருடங்களாக இந்தப் பகுதி உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வைக்குள் அடக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 6மாதகாலத்திற்கு முன்னர் இந்த பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது.
எனினும் பிரதேச மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்த குறித்த மயானம் மக்களிடம் கையளிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் இந்தப் பகுதியில் கடற்படையினர் தமது நடமாட்டத்தை தொடர்ந்திருந்தனர்.
இதனால் மக்களுக்கு மயானம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை  குறித்த பகுதியில் முதியவரொருவர் காலமாகியுள்ளார். இவரது இறுதிச் சடங்குகளை குறித்த மயானத்தில் நடத்த அனுமதியளிக்குமாறு மக்கள் கடற்படையை கோரியிருந்தனர்.
எனினும் இதற்கு கடற்படை உடன்பட்டிராத நிலையில் இறந்தவரின் சடலத்துடன் வீதியில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மக்கள் அச்சுறுத்தல் விடுத்தனர். இந்த நிலையில் மாற்று நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் கடற்படை குறித்த மயானத்தை பொதுமக்களிடம் கையளிக்க முன்வந்திருக்கின்றது.
எனினும் குறித்த மயானத்திற்குச் செல்லும் வீதி தொடர்ந்தும் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றது. இதனால் தற்போது கடற்கரையை சுற்றியே பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
மேலும் மயானத்திற்குரிய வீதியை திறப்பதற்கு அமைச்சர் டக்ளஸிற்கு கோரிக்கை கடிதம் எழுதுமாறு கடற்படை அரசியல் செய்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் மயானம் திறக்கப்பட்டதுபோல் வீதியும் திறக்கப்படவேண்டும் என மக்கள் தெரிவித்திருக்கின்றர்.
இதேவேளை மக்களுடன் இணைந்து வலிவடக்கு கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்கள் எஸ்.சுகிர்தன், எஸ்.சஜீபன், எஸ்.மதி ஆகியேர் இந்த போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த முதியவரின் சடலம் மாலை 3மணியளவில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து சென்ற இளைஞர்கள் யாழில் கொள்ளை


நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞர் குழுவினர், யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று செவ்வாய்கிழமை அதிகாலை கடைகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த 12 இளைஞர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் பயணம் செய்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்களால் கொள்ளையிடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் நாளை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார். 

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் தீ விபத்து


கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாகவும் இத்தீ விபத்தினால்  ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும்  தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள்  தெரிவித்துள்ளனர்.

தமிழர்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் என்னைக் கைது செய்வார்கள் : ஜனாதிபதி மகிந்த


மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் �டெக்கன் குரோனிக்கல்� நாளேட்டிற்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று வெளியாகியுள்ள இந்தச் செவ்வியின் முழு வடிவம் பின்வருமாறு:
கேள்வி - சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் மேற்கு நாடுகளை எப்படி அணுகப் போகிறீர்கள்?
பதில் - மேற்கு நாடுகளில் எஞ்சியுள்ள புலிகள் தான், சிறிலங்காவுக்கு எதிராக அடிப்படையற்ற விவகாரங்கள் குறித்து, அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். மேற்கு நாடுகள் கஸ்மீர் தொடர்பாகவும் சிறிலங்கா தொடர்பாகவும் தமது நாடாளுமன்றங்களில் பேசுகின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், ஈராக்கிலும் தாம் என்ன செய்தன என்று மௌனம் காக்கின்றன.
சிறிலங்காவில் 1880 ஊவா கிளர்ச்சியின் பின்னர், 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் பிரித்தானியர்கள் கொன்றனர். மக்களைப் பட்டினி போடுவதற்காக அங்குள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தையும் அழித்தனர். நிலத்தைக் கைப்பற்றினர்.
இந்தியாவிலும் அதையே செய்தனர். அவர்கள் தான் இப்போது மனிதஉரிமைகள் பற்றிப் பேசுகின்றனர். மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது. அதற்கு நான் தயாராக இல்லை.
கேள்வி- நீங்கள் சீனாவை நோக்கிச் சாய்வதாக ஒரு உணர்வு இந்தியாவில் உள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பூகோள அரசியல் நிலையை அது காயப்படுத்தக் கூடும் அல்லவா? என்னைப் பொறுத்தவரையில் இந்தியா தான் முதலாவது. மற்றெல்லோரும் இந்தியாவுக்குப் பின்னர் தான் வரமுடியும்.
நான் பதவிக்கு வந்தவுடன் இந்தியாவுக்குச் சென்று அதன் ஆதரவைப் பெற்றேன். அதற்குப் பிறகு, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா பற்றி நான் கவலைப்படவில்லை.
உண்மையில், விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பாக முக்கியமான தகவல்களை வழங்கி உதவியது அமெரிக்கா தான். அதன் மூலம் அவற்றைக் கடலில் வைத்து அழிப்பது சாத்தியமானது.
அதுபோல சீனாவும் உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற வந்துள்ளது. நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவுக்கு நாம் வழங்கிய ஒவ்வொரு திட்டத்தையும் முதலில் இந்தியாவிடம் தான் வழங்கினோம்.
ஆனால் அங்கிருந்து பதில் வரவில்லை. கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்தும் விளம்பரப்படுத்தினோம். சீனா மட்டுமே வந்தது.
கேள்வி - போர் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழர்கள் சுயநிர்ணய உரிமையைக் கோருவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழர்களின் கவலைகளுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள்?
பதில் - அந்தத் தேர்தல்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறைமையின் அடிப்படையில் நடைபெற்றன. கணிசமானளவு வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் விழுந்துள்ளன. வடக்கு,கிழக்கிற்கு வெளியே தான் 54 வீதமான தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் ஒரு நிலையான அரசியல் தீர்வில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் அது பரந்துபட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சிறப்பாக போருக்குப் பிந்திய சூழலில் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
கேள்வி - அதிகாரப்பகிர்வை எப்படி முன்வைக்கப் போகிறீர்கள்?
பதில் - அதிகாரப்பகிர்வுக்காக நாங்கள் ஏற்கனவே வடக்கு தவிர ஏனைய மாகாணங்களில் மாகாணசபைகளை நிறுவியுள்ளோம். வடக்கிலும் கூட அதனை அமைக்கவுள்ளோம்.
மாகாண நிர்வாகத்தை எப்படி வலுப்படுத்துவது, மேம்படுத்துவது என்றும் பெரும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை பகிர்ந்து கொள்வது குறித்தும் அவர்கள் கலந்துரையாட வேண்டும்.
கேள்வி - நீங்கள் முன்வைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை பயனற்றது என்றும், அதுபோன்ற பல குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட போதும், அரசியல் பிரச்சினைகள் இன்னமும் உள்ளதாக பலரும் கூறுகின்றனரே?
பதில் - சிக்கலான எந்தப் பிரச்சினைக்கும் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக்குழு நல்லதொரு அணுக்குமுறை.
துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளின் பெயரை முன்வைக்கவில்லை. அவர்கள் விடுதலைப் புலிகளின் அதே மனோபாவத்துடனேயே உள்ளனர். அவர்களின் கோரிக்கைகளான வடக்கு,கிழக்கு இணைப்பு, காவல்துறை மற்றும் காணி அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்றவை.
உங்களின் நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள், ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்துக்கு பயணம் செய்த போது மாயாவதி அவரைக் கைது செய்ய முனைந்தார்.
இவர்கள் என்னைக் கைது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? (தமிழர்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களாலேயே இயக்கப்படுகிறது. அவர்களுக்கு அமைதியோ அரசியல்தீர்வோ தேவையில்லை.
நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பது முக்கியமானது. ஆனால் அவர்கள் தமது பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரைக்கவில்லை.
இரா.சம்பந்தன் சிலருக்குப் பயப்படுகிறார் போலத் தோன்றுகிறது. இப்போது அவர்கள் அமெரிக்காவுக்குப் போய் முறையிடுகிறார்கள். இதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. பிரபாகரன் காலத்தில் செயற்பட்டது போன்றே செயற்படுகின்றனர்.
சிறிலங்காவில் அரசியல்தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று எந்தவொரு நாடாவது கவலைப்படுமானால், தமது நாடுகளில் தங்கியுள்ள புலம்பெயர் தமிழர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.
எம்மைக் குறை சொல்வது அர்த்தமற்றது. தமிழ்க் கட்சிகள் தான் அரசியல்தீர்வை தாமதப்படுத்துகின்றன.
கேள்வி - மோதல்கள் இடம்பெற்ற சூழலில் கூட வடக்கில் உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்றத் தேரதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் இப்போது அங்கு ஏன் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தவில்லை?
பதில் - கூடிய விரைவில் அங்கு நிச்சயமாக தேர்தல் நடத்தப்படும். ஆனால் மாகாணசபைத் தேர்தலில் மக்கள் பங்கேற்க உண்மையான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

மோதல் சூழலில் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயக ரீதியில் மக்கள தமது கருத்தை வெளிப்படுத்துவதற்கு எதிராக விடுதலைப் புலிகள் செயற்பட்டனர்.
கேள்வி - வடக்கு இன்னமும் கூட அதிகளவில் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழர்கள் முறையிடுகிறார்கள். 3 இலட்சம் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு இலட்சம் படையினர் நிலைகொண்டுள்ளனர். சனசமூக நிலைய கூட்டத்துக்கோ அல்லது பாடசாலை நிகழ்வுக்கோ கூட சிறிலங்கா இராணுவத்தின் அனுமதி தேவைப்படுகிறது. குடியியல் நிர்வாகத்தில் இருந்து இராணுவத்தை எப்போது நீக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில் - வடக்கில் 3இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். சனத்தொகைக்கேற்ப அங்கு படையினர் நிலைநிறுத்தப்படவில்லை. ஆனால் அந்தப் பிராந்த்தின் பாதுகாப்புக்கு அவர்கள் தேவைப்படுகின்றனர்.
சிறிலங்கா இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள அந்தப் பகுதி மூன்று பத்தாண்டுகளாக மோசசமான ஆயுதமோதல்கள் இடம்பெற்ற பிரதேசம். அங்கு சிறிலங்கா இராணுவம் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் முக்கியமான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
கேள்வி- இராணுவ முகாம்களை அமைப்பதற்காகவோ அல்லது சிங்கள வர்த்தகர்களுக்காகவோ தமது நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாக தமிழர்கள் சந்தேகிக்கின்றனரே?
பதில் - இது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் கிளப்பி விடப்பட்டுள்ள புரளி. நாடெங்கும் ஆயுதப்படையினர் உள்ள்ளர், அவர்களின் அவர்களின் முகாம்கள் உள்ளன. சிறிலங்காவின் பிராந்திய எல்லைகளையும், இறைமையையும் பாதுகாக்க இது அவசியமானது.
விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வசித்தனர். சிங்களவரோ, தமிழரோ முஸ்லிமோ அவர், யாராக இருந்தாலும் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அவர்களின் நிலத்தை கொடுக்க வேண்டும்.
வடக்கில் தமிழர்கள் வகித்து வரும் பெரும்பான்மையை சிறிலங்கா அரசின் எந்தவொரு செயற்பாடும் மாற்றியமைக்காது.

ஆழிப்பேரலை அனர்த்த நிகழ்வுகள் ஜேர்மனியிலும் அனுஷ்டிப்பு


ஆழிப்பேரலை மற்றும் போரில் கொல்லப்பட்ட மக்களுக்காக நேற்று முன்தினம் ஜேர்மனியின் ஆலன் நகரில், அந்நகர மதகுரு பெர்ன்ஹார்ட் ரிக்டர் (Bernhard Richter) தலைமையில் ஆலன் தமிழ் மற்றும் ஜேர்மனிய மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், இலங்கையில் போரால் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் முகமாகவும் அந் நகர தேவாலயத்தில் இருந்து Marktbrunnen எனும் இடத்துக்கு அமைதிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
ஜேர்மன் பெர்லின் நகரிலும் 27 .12 .2011 அன்று நடைபெற்ற தேவாலய ஒளி விழாவில் ஆழிப்பேரலை காவுகொண்ட மக்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆலன் தமிழ் மக்கள் பல்லாண்டு காலமாக ஜேர்மனிய மக்களுடன் சமூக இணைவாக்கம் கருதி பல வேலைத்திட்டங்களை முன்மாதிரியாக முன்னெடுப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு அங்கு வருகை தந்திருந்த உள்ளூர் ஊடகத்திற்கு ஆலன் தமிழ் பாடசாலையின் அதிபர் திரு தனபாலசிங்கம் அவர்கள் தமிழ் மக்களின் இன்றைய நிலைமைகளை எடுத்துரைத்ததை தொடர்ந்து சுனாமி பேரழிவு காலத்தில் ஜேர்மனிய மக்கள் ஆற்றிய உதவிகளுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.
இறுதியாக 2009 ஆண்டு போர் முடிவடைந்தாலும் இன்று வரை இலங்கை அரசாங்கம் சர்வதேச அமைப்புகளை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையை இன்று வரை பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்களுக்கு போகவிடாமல் , மற்றும் சுயாதீனமான விசாரணைகளை மேற்கொள்ள விடாமல் தடுக்கின்றனர் என்பதையும் எடுத்துரைத்தார்.
இயற்கை அழிவால் கொல்லப்பட்ட மக்களை மறவாமல் , சிறப்பாக ஜேர்மனிய மக்களையும் இணைத்து இவ் நினைவஞ்சலியை உணர்வுபூர்வமாக முன்னெடுத்த ஆலன் நகர தமிழ் மக்களுக்கு, ஜேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கத்துக்காக நீண்ட பயணம் தேவை : அவுஸ்திரேலியா


இலங்கை நல்லிணக்கத்தை ஏற்படுத்த இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அண்மையில் இலங்கையின் அழைப்பு ஏற்று  அவுஸ்திரேலிய நாடாளுமன்ற குழு ஒன்று அங்கு பயணம் செய்திருந்தது. இக் குழுவிற்கு தலைமை வகித்த அவுஸ்திரேலிய தொழில்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான Maria Vamvakinou இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இன்னும் நல்லிணக்கத்துக்கான அடிப்படைகளை அரசாங்கம் ஏற்படுத்தவில்லை என்று பலரும் கருத்துரைத்துள்ளனர். எனவே நல்லிணக்கத்துக்காக அங்கு நீண்ட வழிமுறைகள் அவசியமாகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேசத்தின் கவனத்தை நன்கு உணர்ந்துள்ளனர். எனினும், நல்லிணக்கத்துக்கான பேச்சுவார்த்தைகளின் போது இரண்டு தரப்பும் ஒன்றை ஒன்று குற்றம் சுமத்தும் அடிப்படைகளை இன்னும் கைவிடவில்லை. எனவே தெளிவான ஒரு சமாதான நடைமுறைக்கான நகர்வை இன்னும் இலங்கையில் காணமுடியவில்லை என்றும் Maria Vamvakinou தெரிவித்துள்ளார்.

இலங்கையில் திறமை வாய்ந்த பணியாளரை இழந்து விட்டோம் : சர்வதேச செஞ்சிலுவை சங்கம்


இலங்கையில் வைத்து திறமை வாய்ந்த பணியாளர் ஒருவரை இழந்து விட்டதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
அண்மையில் தென்னிலங்கையின் தங்காலை ஹோட்டலில் வைத்து கொல்லப்பட்ட பிரிட்டிஸ் பிரஜை தொடர்பிலேயே சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
32 வயதான Khuram Shaikh கடந்த 25 ஆம் திகதி தங்காலையில் உள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டும் துப்பாக்கியால் சுடப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளமை மற்றும் அவருடன் தங்கியிருந்த அவருடைய தோழியான 23 வயதான ரஸ்யாவின் Victoria Alexandrovna காயங்களுக்குள்ளானமை தொடர்பாகவே சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் Khuram Shaikh பாலஸ்தீன காஸா பிரதேசத்தில 2010 ஆம் ஆண்டு பௌதீக புனரமைப்பு பிரிவின் முகாமையாளராக செயலாற்றி வந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளதுடன், அவர் இலங்கையில் வைத்து கொலை செய்யப்பட்டமை கவலையை தருவதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

Monday, December 26, 2011

திருத்தப்பட்ட உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன



கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலான திருத்தப்பட்ட தரவரிசை விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் தற்போது தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

www.doenets.lk எனும் இணையத்தளத்தில்  இப்பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

சுனாமியால் உயிர் இழந்தவர்களை நினைத்து துன்புறுவதில் இருந்து மீட்சி பெறுதல் அவசியம்: சீ.யோகேஸ்வரன்


2004ம் ஆண்டு நடைபெற்ற சுனாமி அனர்த்தத்தால் உறவுகளை இழந்து தவிக்கும் எம்மக்கள் அதிலிருந்து மீட்சி பெற முனைய வேண்டும். மிகவும் பாரிய இழப்பை சந்தித்த நாவலடி மக்கள் இழப்புகளை தொடர்ந்து சிந்தித்து உங்களது எதிர்காலத்தை பாதிக்க செய்ய கூடாது என மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில், சுனாமி ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களுக்கு இந்து குருமார் ஏற்பாட்டில் நடைபெற்ற கிரியை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சீ.யோகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அனர்த்தத்தினால் உயிரிழந்த உறவுகள் அனைத்தும் இறைபதம் அடைந்துள்ளன என்ற எண்ணங்களை மனதில் கொண்டு செயற்பட முன்வரவேண்டும். இவ் இயற்கை அனர்த்த அழிவின் நிலையை நினைவில் இருந்து ஓரளவு நீக்கிச் செல்லல் சாலச் சிறந்ததாகும்.
தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பிதிர் கிரியைகள் நடாத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இவ்வுயிர்கள் சிலவேளை வேறு இடங்களில் புதிய ஒரு பிறப்புக்கு நுழைந்திருக்கலாம் அல்லது இறைவன் திருப்பதத்தை அடைந்திருக்கலாம். என அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களால் எதிர்காலத்தில் இவ்வாறான துன்ப சூழல் உருவாகாமல் இருக்க நாம் இறைவனை பிராத்திப்போம் என்று கூறினார்.

பெற்றோல் தாங்கி வெடித்ததில் இரண்டு மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்!- யாழ்.கல்வியங்காட்டில் சம்பவம்


யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வெடித்துச் சிதறியது. இதனால் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
இதுபற்றி தெரியவருவதாவது:
பருத்தித்துறை வீதி கல்வியங்காட்டில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

அதே சமயம் எரிபொருள் நிரப்புவதற்காக மற்றொரு மோட்டார் சைக்கிள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் பெற்றோல் ராங் வெடித்துச் சிதறியது. இதில் குறித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் எரிந்து சாம்பலாகியது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு


கிளிநொச்சி திருநகர் வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் அரியாலையை சொந்த இடமாகக் கொண்ட இ.இரவீந்திரன் வயது 49 என்பவரே தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வியாபார நிலையத்தினர் நேற்று நெருங்கிய உறவினர் ஒருவரின் பிறந்தநாள் நிகழ்வுக்கு சென்று, இன்று வியாபார நிலையத்திற்கு திரும்பிய போது குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த இவர் திருநகர் வீதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
தற்கொலை சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளளனர்.

பரீட்சை பெறுபேற்றில் ஏற்பட்டுள்ள குளறுபடி காரணமாக மட்டு. மாணவி தற்கொலை முயற்சி


வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சை முடிவில் ஏற்பட்டுள்ள குளறுபடி காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
கிராண்குளம் பகுதிகளை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த மாணவி பாடசாலையில் திறமையான மாணவியெனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறித்த மாணவியின் பரீட்சை முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டதை விட மிக மோசமான நிலையில் வெளிவந்ததன் காரணமாக இந்நிலையேற்பட்டதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் உயர்தரப்பரீட்சை வினாத்தாள் மதீப்பீடு மற்றும் புள்ளியிடல் முறையில் கடும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு அமைக்களும் கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் பரீட்சை புள்ளிகளை மீளாய்வு செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளன.

விஞ்ஞான பிரிவில் தோற்றிய சில மாணவர்களுக்கு கலைப்பிரிவுக்குரிய பெறுபேறுகள் வெளியிடுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பிரதேசங்களில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் மாணவர்கள் கடும் அதிர்ப்பதி நிலையில் உள்ளதுடன் பரீட்சை முடிவுகள் மீளாய்வுசெய்யப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேநேரம் குறித்த பரீட்சை முடிவுகளை மாணவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மாவட்ட மற்றும் தேசிய ரீதியிலான நிலைகளில் குழப்பம்: பரீட்சைத் திணைக்களம்


கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் பல சிக்கல்கள் காணப்படுவதாகவும் தற்போது அதனை சீர்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பரீட்சைத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட மற்றும் தேசிய ரீதியிலான நிலைகளில் குழப்பங்கள் காணப்படுவதால் மாவட்ட, தேசிய ரீதியிலான நிலைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் வெட்டுப்புள்ளி மற்றும் பாடப் பெறுபேறுகளில் எவ்வித குழப்பங்களும் இல்லை எனவும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் கடந்த 9ம் திகதி தொடக்கம் இழுபறி நிலையே ஏற்பட்டு வந்தது. எனினும் நேற்று இரவு 11 மணிக்குப் பின்னரே பரீட்சைப் பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளிடப்பட்டன.
வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் கணிதப்பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, மாவட்ட மற்றும் தேசிய ரீதியிலான நிலையில் குழப்பநிலை காணப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொலையுண்ட பிரித்தானிய பிரஜையின் இளம் மனைவி மீது பாலியல் துஷ்பிரயோகம்

தங்காலை பிரதேச ஹோட்டல் ஒன்றில் நேற்று அதிகாலை இடம்பெற்ற சம்பவத்தின் போது கொல்லப்பட்ட 27 வயதான செஞ்சிலுவைச் சங்கத் தொண்டரான பிரித்தானியாவைச் சேர்ந்த குரும் ஷேக் என்பவரின் 24 வயதான மனைவி மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த இந்தப் பெண் தற்போதும் காலி, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்யும் பொருட்டு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. சம்பவத்ததுடன் தொடர்புடையவர் எனக் கருதப்படும் தற்போது தலைமறைவாகியுள்ள தங்காலை பிரதேச சபையின் தலைவரான சம்பத் சந்திரபுஷ்பவைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்றிரவு சட்டத்தரணிகள் ஊடாக தங்காலை பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர்கள் பயணித்த பஸ் வண்டி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி அந்த பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவரின் மரணத்திலும் தங்காலை பிரதேச சபையின் தலைவரான சம்பத் சந்திரபுஷ்பவே சம்பந்தப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் தேடப்படும் தங்காலை பிரதேச சபைத் தலைவரான சம்பத் சந்துர புஷ்பவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் காணப்படுகிறார்.